தமிழகம்

கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு எதிரொலி | தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன்தினம் மாலை ஆட்டோ ஒன்றில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் தீவிரவாதிகளின் சதித்திட்டம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழகத்தில், மாநில எல்லைகள், கடலோர பகுதிகள், சுற்றுலா தளங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் உள்பட அனைத்து பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் அளிக்குமாறு பொது மக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மண்டல ஐஜிக்கள் தலைமையில் டிஐஜிக்கள் மேற்பார்வையில் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதேபோல், மாநகர ஆணையர்கள் தங்கள் காவல் எல்லையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடலோரங்களில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடக, ஆந்திரா எல்லைகளில் உள்ள தமிழக பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், கூடுதல் சோதனை சாவடிகளை அமைத்து போலீஸார் விடிய விடியவாகன தணிக்கை நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் வரும் வாகன ஓட்டிகளை போலீஸார் தீவிர விசாரணைக்கு பிறகே விடுவிக்கினறனர். சென்னையை பொருத்தவரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீஸாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் பயணிகள் அனைவரும் முழு சோதனைக்கு பிறகே அனுமதிக் கப்படுகின்றனர். தங்கும் விடுதிகள், லாட்ஜ்களிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த மாதம் 23-ம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் குக்கர் குண்டு வெடித்துள்ளதால் மாநிலம் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மாநில எல்லைகளில் கூடுதல் சோதனை சாவடிகளை அமைத்து போலீஸார் விடிய விடிய வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT