சென்னை: மக்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் செயல்களை காங்கிரஸ் இலக்கிய அணியும், அதன் சொற்பொழிவாளர்களும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றுப் பேசியதாவது: இலக்கிய அணிகள்தான் ஓர் இயக்கத்தின் உயிர். அது வலிமையாக இருந்தால், அந்த இயக்கமும் வலிமையாக இருக்கும். கவிஞர்களுக்கு சூரியன், நிலா, மலர்கள், இயற்கை என எதைப் பார்த்தாலும் கற்பனை வரும். அவர்கள் கற்பனையிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அது இயல்புக்கு மாறானதாக இருக்கும்.
ஆனால், திருக்குறளின் சிறப்பு என்னவென்றால் அதில் எங்கும் புகழ்ச்சியோ, கற்பனையோ இல்லை. உலகில் எந்த மொழியிலும் எந்த இலக்கியத்திலும் இல்லாத, உண்மையை மட்டுமே சொல்லி இருக்கும். எந்த தனி மனிதனைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், மொழியைப் பற்றியும் குறிப்பிடாத ஒரு இலக்கியம் இருக்கிறது என்றால் அது திருக்குறள் மட்டும்தான். மனிதனைப் பற்றியும், வாழ்க்கை நெறிகள் பற்றியும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற நூல் உலகத்திலேயே இல்லை. இது தமிழின் பெருமை. பகவத்கீதையில் யுத்தம் செய்வது நியாயப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதை ரஷ்ய அரசு தடை செய்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் முயற்சியால் அத்தடை நீக்கப்பட்டது. உலகத்திலேயே 2-வது ரயில் சேவை ஜவஹர்லால் நேரு இந்தியாவுக்கு கொண்டு வந்தார். ரயில்வே மக்களின் சொத்து.
ஆனால், எதுவுமே தெரியாமல் பிரதமர் மோடி போன்றவர்கள் ரயிலை மட்டுமில்லை, ரயில் நிலையத்தையே விற்கிறார்கள். நமது பரப்புரை சரியில்லாததாலும் இலக்கிய அணி, சொற்பொழிவாளர்கள் செயலற்று இருப்பதாலும் தான் இந்த பாதக செயல் மக்களைவேகமாகச் சென்றடையவில்லை. இதையெல்லாம் மக்களிடம் விரைவாகக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் இலக்கிய அணித் தலைவர் பி.எஸ்.புத்தன், சென்னை பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநர் உலகநாயகி பழனி, கட்சியின் தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், மாநிலதுணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் எஸ்.காண்டீபன், சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.