வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இயக்கப்பட்ட பாட்னா அதிவிரைவு ரயிலில் தமிழக பிரதிநிகள் சென்றனர்.  | படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க 2-வது ரயிலில் 216 பிரதிநிதிகள் பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில், வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 16-ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன.

இதில் பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் விதமாக, தமிழகத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் காசிக்கு மொத்தம் 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தமிழகத்தில் இருந்து 2,592 பேர் பயணம் செய்கின்றனர். ஏற்கெனவே, ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக வாரணாசிக்கு புறப்பட்ட முதல் ரயிலில் 216 பேர் சென்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து 2-வது ரயிலில் புறப்பட்டவர்களுக்கு சென்னை பெரம்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட இந்த ரயிலில் கோயம்புத்தூரில் 82 பேரும், சேலத்தில் 51 பேரும் ஏறினர். இந்த ரயில் நேற்று நண்பகல் சென்னை பெரம்பூருக்கு வந்தது. ரயிலில் வந்த பிரதிநிதிகளுக்கு பெரம்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதவிர, பெரம்பூரில் 83 பேர் ஏறிக்கொண்டனர். மொத்தம் 216 பிரதிநிதிகளையும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ், பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

கணேஷ் கூறும்போது, ‘‘பயணிகளுக்கு உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் பாதுகாப்பாக பயணிக்க ஆர்பிஎஃப் வீரர்கள் உடன் உள்ளனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT