தமிழகம்

தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று: மிக கனமழை வாய்ப்பு குறையும்

செய்திப்பிரிவு

சென்னை: வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடந்த 18-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு அல்லது வடமேற்காக நகர்ந்து நவ. 20-ம் தேதி (இன்று) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

பின்னர், மேற்கு அல்லது வடமேற்காக நகர்ந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கிச் செல்லும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்றின் வலு குறைந்துள்ளது. அதனால், வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி குளிர் காற்று வீசுகிறது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆனால், கரையை நெருங்கும்போது நிலப் பரப்பில் நிலவும் குளிர் காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும். கரையை நெருங்கும்போது மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதனால் தமிழகத்துக்கு மிக கனமழை மற்றும் பரவலான மழைக்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.

எனினும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவ. 21, 22-ம் தேதிகளில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT