வேலூரில் மாவோயிஸ்ட் பிரபா (எ) சந்தியாவின் மறுவாழ்வுக்காக தமிழக அரசு ‘‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு" திட்டத்தின் கீழ் வேலூர் அடுத்த அரியூரில் தொடங்கப்பட்ட ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அருகில், காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), டாக்டர் பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), டாக்டர் தீபா சத்யன் (ராணிப்பேட்டை), க்யூ பிரிவு எஸ்.பி., கண்ணம்மாள், ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர்.படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

தமிழகத்தில் முதல் முறை | மனம் திருந்திய மாவோயிஸ்ட் பெண்ணுக்கு ஆவின் பாலகம்

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழக அரசால் 2005-ல் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூ., (மாவோயிஸ்ட்) அமைப்பானது இந்திய அரசால் தீவிரவாத இயக்கமாக 2009-ல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது.

இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மனம் திருந்தி சமுதாய வாழ்வில் இணைவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு’ திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த பிரபா என்ற சந்தியா (39) என்பவர் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல ஆயுதக்குழுவில் செயல்பட்டு வந்துள்ளார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கேரள மாநில காவல் துறையினர் கிருஷ்ண மூர்த்தி கைதான நிலையில், அவரது பிரபா உடல்நலம் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற முடியாத நிலையில் மனம் திருந்தி வாழ விரும்பினார். அவர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி சரணடைந்தார். அவரை, வேலூர் மாவட்டம் அரியூர் அருகேயுள்ள தனியார் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பக்கவாதம் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் பிரபாவுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு’ திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆவின் நிர்வாகம் சார்பில் பிரபாவுக்கு அரியூர் அருகே ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எஸ்.பி.,க்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), டாக்டர் தீபா சத்யன் (ராணிப்பேட்டை), கண்ணம்மாள் (க்யூ பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆவின் பாலகத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் முறை: தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவருக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் தொடங்கப்பட்டுள்ளது இங்குதான் என க்யூ பிரிவு எஸ்.பி., கண்ணம்மாள் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT