விழுப்புரம் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி. 
தமிழகம்

விழுப்புரம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்பட்டதா?

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் விழுப்புரம் எம்ஜிஆர் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படாமல், குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் இருந்து, நமது ‘இந்து தமிழ் திசை‘யின் ‘உங்கள் குரல்’ பகுதிக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து, இரு கல்லூரிகளின் நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு: “விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியலில் உள்ள 13 பாடப்பிரிவு களில் 6,100 மாணவ, மாணவிகளும், முதுகலை மற்றும் முது அறிவியலில் உள்ள 11 பாடப் பிரிவுகளில் 1,700 மாணவ, மாணவிகளும் பயின்று வருகிறனர்.

விழுப்புரம் எம்ஜிஆர் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் 2,516 மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிகளில், கடந்த ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி நேர்காணல் மூலம் தொடங்கி, 4 முறை மாணவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்ட போதிலும் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படாமல் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டதாக மாணவர்கள் போராட் டமும் நடத்தினர்.

தற்போது, பொறியியல் படிப்பதை விட, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்துவிட்டு போட்டித் தேர்வுக்கு சென்று விடலாம் என்ற மனப்பான்மை அனைத்து மாணவர்களிடம் வந்து விட்டது. இந்த எண்ண ஓட்டத்தால் நடப்பாண்டு கல்வியாண்டில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 18 ஆயிரம்விண்ணப்பங்களும், அரசு மகளிர் கல்லூ ரிக்கு 7 ஆயிரம் விண்ணப்பங்களும் குவிந்தன.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி.

மாணவர்களின் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படும் கட் ஆப் 99.9 சதவீதத்தில் தொடங்கி 92 சதவீதத்தோடு நிறைவு பெற்று விடுகிறது. அதன்பிறகு இடஒதுக்கீடு வருகிறது. சிலர், ‘தங்களை விட குறைவான மதிப்பெண் பெற்ற மாணவருக்கு இடம் கிடைத்து விட்டது’ என்று குற்றம் சாட்டுகின்றனர். இடம் கிடைக்கப்பெற்ற மாணவரின் சாதி வாரியான இடஒதுக்கீட்டை உற்று நோக்கினால், அந்தப் பிரிவின் கீழ் அவருக்கு இடம் கிடைத்திருக்கும். அதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.

ஆனால், இந்த இரு அரசு கல்லூரி நிர்வாகத்தினரும் இப்படிச் சொல்வதை பெற்றோர் தரப்பில் உறுதியாக மறுக்கின்றனர். “சிபாரிசு அடிப்படையில் காலம் காலமாக அனைத்துக் கல்லூரிகளிலும் இடம் வழங்கப்படுகிறது. அதே போல இந்தாண்டும் இந்த இரு கல்லூரிகளிலும் வழங்கப்பட்டுள்ளன. அப்படி சிபாரிசு அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது அதிகபட்சம் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்” என்கின்றனர்.

“இந்த இரு அரசு கல்லூரிகளும், தங்களது சேர்க்கை விவரங்களை முறையாக ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அதை தங்கள் கல்லூரிகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் இதில் நடந்த குளறுபடிகள் தெரிய வரும்” என்று குற்றச்சாட்டை முன்வைக்கும் பெற்றோர் தெளிவாக குறிப்பிடுகின்றனர். இரு கல்லூரிகளும், தங்களது சேர்க்கை விவரங்களை முறையாக ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அதை கல்லூரிகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும்.

SCROLL FOR NEXT