தமிழகம்

“எந்த விவாதமும் இன்றி 52 நிமிடங்களில் 9 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்” - மாணிக்கம் தாகூர் கண்டனம்

வே.கோபாலகிருஷ்ணன்

சென்னை: "மக்களவையில் எவ்வித விவாதமும் இன்றி 9 முக்கிய மசோதாக்களை வெறும் 52 நிமிடங்களில் நிறைவேற்றியுள்ள மோடி - ஷா அரசின் சர்வாதிகார ஆணவப் போக்கை உடனடியாக முறியடிக்க வேண்டும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உணவு விநியோகச் செயலிகளை விட மிக வேகமாகவும், விரைவாகவும் டெலிவரி செய்யும் புதிய சாம்பியனாக மோடி-ஷா ஜோடியின் 'புல்டோசர் ராஜ்' உருவெடுத்துள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரலை முற்றிலும் ஒடுக்கும் வகையில், எவ்வித விவாதமும் நடத்தப்படாமல் வெறும் 52 நிமிடங்களில் 9 முக்கிய மசோதாக்களை 'ஃபாஸ்ட் டெலிவரி' முறையில் நிறைவேற்றியுள்ளனர்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா – 1 நிமிடம், எம்எஸ்எம்இ வளர்ச்சி (திருத்த) மசோதா – 2 நிமிடங்கள், வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா – 2 நிமிடங்கள், வங்கியாளர்களின் புத்தகச் சான்று மசோதா – 4 நிமிடங்கள், தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா – 5 நிமிடங்கள், உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா – 6 நிமிடங்கள், கேரளா (பெயர் மாற்றம்) மசோதா – 9 நிமிடங்கள், தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா – 9 நிமிடங்கள், தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் (திருத்த) மசோதா – 14 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தன் துறை சார்ந்த முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் நேரத்தில்கூட கடந்த 23 நாட்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

அதேபோல், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க பயந்து பிரதமர் நரேந்திர மோடியும் ஒளிந்து கொண்டுள்ளார்.

எந்தவொரு விவாதமும் இன்றி மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றும் இந்த மோடி-ஷா அரசின் சர்வாதிகார மனப்பான்மை உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும்.

மக்கள் நாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; உங்களால் வெகுநாளைக்கு இதிலிருந்து தப்பிக்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு மக்கள் நிச்சயம் தக்க பதிலடி கொடுத்து கேள்வி கேட்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT