விபத்தில் காயம் அடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர்.

 
தமிழகம்

வால்பாறை மலைப்பாதையில் 800 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு

கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தபோது பரிதாபம்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: ​வால்​பாறை மலைப்​பாதை​யில், 13-வது கொண்டை ஊசி வளை​வில் உள்ள தடுப்​புச்​சுவரில் சுற்​றுலா வேன் மோதி 800 அடி பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் வேனில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த 9 பேர் உயி​ரிழந்​தனர்.

கேரள மாநிலம் மலப்​புரம் மாவட்​டத்​தில் உள்ள பெருந்​தல்​மன்னா நகரைச் சேர்ந்த 12 பேர், கோடை விடு​முறையையொட்​டி, கோவை மாவட்​டம் பொள்​ளாச்​சியை அடுத்​த வால்​பாறைக்கு வேன் மூலம் சுற்​றுலா வந்​தனர். வேனை முஹம்மது பாசித் என்​பவர் ஓட்​டி​னார்.

இரு நாட்​களுக்கு முன்​னர் வால்பாறைக்கு வந்த இவர்​கள், பல்வேறு இடங்​களைச் சுற்​றிப் பார்த்​தனர். அதைத் தொடர்ந்​து, நேற்று பிற்பகல் கேரளா திரும்​புவதற்​காக வேனில் புறப்​பட்​டனர்.

வால்​பாறை-பொள்​ளாச்சி மலைப்​பாதை​யில், 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வந்​த​போது, ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்து தாறு​மாறாகச் சென்ற வேன், அங்​குள்ள தடுப்​புச் சுவரில் மோதி 800 அடி பள்​ளத்​தில் தலை​குப்​புறக் கவிழ்ந்​தது.

வேனில் இருந்​தவர்​களின் அலறல் சத்​தத்​தைக் கேட்ட அவ்​வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள், வேனில் இடிபாடுகளுக்குள் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

தொடர்ந்து போலீ​ஸாருக்​கும், தீயணைப்​புத் துறை​யினருக்​கும் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அவர்​களும் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். இதில் 2 ஆண், 7 பெண்​கள் என 9 பயணி​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர்.

படு​கா​யங்​களு​டன் நவுஷாத் (39), ஷஹாதீன் (11), மஸ்​னீன் (10), ஓட்​டுநர் முஹம்​மது பாசித் (21) ஆகி​யோர் மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் ஆம்​புலன்ஸ் மூலம் பொள்​ளாச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்​தில் வேன் முழு​வதும் அப்​பளம்​போல நொறுங்​கியது.

விபத்து குறித்து அறிந்த பொள்​ளாச்சி சார் ஆட்​சி​யர் ராமகிருஷ்ணசாமி மற்​றும் அதி​காரி​கள் குழு​வினர் விபத்து நடந்த இடத்​துக்கு வந்து மீட்​புப் பணியை தீவிரப்​படுத்​தினர்.

மேலும் கோவை மாவட்ட ஆட்​சி​யர் பவன்​கு​மார் கிரியப்​பன​வர் பொள்​ளாச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு விரைந்​து, மருத்​து​வக் குழு​வினர் மற்​றும் உதவி​கள் தயார் நிலை​யில் இருக்க அறி​வுறுத்​தி​னார்.

போலீ​ஸார் மற்​றும் தீயணைப்​புத் துறை​யினர் விபத்து நடந்த இடத்தில் முகாமிட்டு தொடர்ந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர். போலீ​ஸாரின் முதல்​கட்டவிசா​ரணை​யில், சுற்​றுலா வேனில் வந்​தவர்​கள், தனி​யார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்​கள் எனதெரிய​வந்​தது.

அவர்​களில் அஜிதா (54), ரம்லா (52), ஜுஹ்ரா (43), ஆஷா (41), மஜீத்(43), சாஜிதா (45) ஷகீலா (37), ருகியா (39), ஹிஷாம் (12)ஆகிய 9 பேர் உயி​ரிழந்​தனர்.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த கோவை மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கார்த்​தி​கேயன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “மலப்​புரம் பகு​தி​யில் இருந்து வால்​பாறைக்கு 13 பேர் வேனில் சுற்​றுலா வந்​துள்​ளனர்.

வேன் விபத்​தில் சிக்​கிய​தில் 7 பெண்​கள்உள்பட 9 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​களது சடலங்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. நான்கு பேர் சிகிச்​சைக்​காக பொள்​ளாச்சி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இந்த விபத்து குறித்து மலப்​புரம்மாவட்ட எஸ்பி மூலம் சுற்​றுலா வந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு தகவல் அளிக்​கப்​பட்​டுள்​ளது” என்றார். இதுகுறித்து வால்​​பாறை அருகே உள்ள காடம்​​பாறை போலீ​ஸார் வழக்குப் பதிந்து தொடர் விசா​ரணை​யில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர்.

SCROLL FOR NEXT