தமிழகம்

திருமங்கலம், சிவகாசி பட்டாசு ஆலைகளில் 7 பேர் பலியான வழக்கு: 4 பேருக்கு முன்ஜாமீன் மறுப்பு

கி.மகாராஜன்

மதுரை: திருமங்கலம், சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலியான வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் 4 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில், அனுசியாதேவிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 10ம் தேதி நடந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் அனுசியாதேவி, அவர் கணவர் வெள்ளையன், ஆலை மேற்பார்வையாளர் பாண்டி ஆகியோர் சிந்துபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் வெள்ளையன், பாண்டி ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல், விருதுநகர் மாவட்டம் பூசாரித்தேவன்பட்டி பேன்சி பட்டாசு தொழிற்சாலையில் அக்.2ல் நடந்த வெடி விபத்தில் இருவர் பலியாகினர். இந்த வழக்கில் தொழிற்சாலை செயல்பட்டு வந்த இடத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, பட்டாசு ஆலை உரிமையாளர் திருப்பதி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி நக்கீரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "திருமங்கலம் அழகுசிறையில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. வருவாய்துறை விசாரணை இன்னும் முடியவில்லை. சிவகாசி ஆலை வழக்கில் பட்டாசு தயாரிக்கவே அனுமதி பெறவில்லை. இதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்றார். இதையடுத்து 4 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT