கரூர்: கரூர் அருகே தோரணக்கல்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்கறிஞர் குணசேகரன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில், 2 மாதங்களாக கழிவுநீர் தொட்டி மூடி கிடந்தது. அதில், இருந்த சவுக்கு முட்டுகளை பிரிப்பதற்காக நவ.15-ல் உள்ளே இறங்கிய தொழிலாளர்களான சிவா என்ற ராஜேஷ்குமார்(38), மோகன்ராஜ்(23), சிவக்குமார் (38) ஆகியோர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். கரூர் தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டனர்.
கொத்தனாரான கார்த்திக்(35) என்பவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில், சிவக்குமாருடன் வேலைக்குச் சென்ற தனது கணவர் கோபாலை(36) காணவில்லை என சின்ன மலைப்பட்டி விஜயா என்பவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, கரூர் தீயணைப்பு வீரர்கள் அதே கழிவுநீர்த் தொட்டியில் நேற்று தேடியபோது, கோபாலின் உடல் அங்கு கிடந்தது. அதை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். தொட்டியின் மேல்பகுதி கான்கிரீட்டை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.