தமிழகம்

புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளுடன் தஞ்சையில் ரூ.7.85 கோடி பிடிபட்டது: தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7.85 கோடி பணம் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகில் உள்ள டேன்டெக்ஸ் ரவுண்டானா அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த ஒரு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ரிசர்வ் வங்கியால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என ரூ.7.85 கோடி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அந்த பணத்தை தஞ்சாவூரில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம்களுக்கு கொண்டு செல்வதாக, வேனில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் இருந்தும், அந்த குறிப்பிட்ட வேனில்தான், பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணம் இல்லை என தெரிகிறது. இதையடுத்து, அந்த பணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல, தஞ்சை மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை அருகில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு நடத்திய வாகன சோதனையின்போது, ஒரு காரில் ரூ.38.50 லட்சம் இருப்பது தெரியவந்தது. சிதம்பரத்தில் உள்ள ஒரு வங்கியிலிருந்து, திருச்சியில் உள்ள வங்கிக்கு அந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT