புதுச்சேரி: கிராம இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயிற்சிக்கு ஏது வாகவும் புதுச்சேரியில் 12 இடங்களில் உள் விளையாட்டு அரங்குகள் கட்டஇந்திய விமானப் பணிகள் ஆணையம்- புதுச்சேரி கல்வித்துறை இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது.
அதன்படி இந்திய விமானப் பணிகள் ஆணையம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக ரூ.5 கோடியில் பாகூர், மணவெளி, டி.ஆர்.பட்டினம், ஏனாம் ஆகிய 4 இடங்களில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.1.25 கோடி செலவில் பேஸ்கட் பால், பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் மற்றும் பல உள் விளையாட்டுகள் அடங்கிய பல் நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த 2020 ஆகஸ்டில் நடைபெற்றது.அப்போதைய முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் இப்பணியை தொடங்கி வைத்தனர். உள்விளையாட்டு அரங்கம் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதன்பிறகு உள்விளையாட்டு அரங்கின் பணிகள் முழுமையடைந்தது.
கடந்த 2022 பிப்ரவரியில் முதல்வர்ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர்செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் விளையாட்டு வீரர்களின் பயன்பாட் டுக்காக அதனை திறந்து வைத்தனர். திறப்பு விழா நடைபெற்று சுமார் 9 மாதங்கள் ஆன நிலையிலும், இந்த உள் விளையாட்டு அரங்கம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பெரும் சிரமத் துக்கு ஆளாகி வருகின்றனர். உள் விளையாட்டு அரங்கின் பக்கவாட்டு பகுதியில் உள்ள இடத்தில் பேட்மிட்டன் விளையாடி வருகின்றனர்.
மேலும் கல்லூரி அருகில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வாலி பால் உள்ளிட்டவைகளை் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் வீரர்கள் மிகுந்த இன்னல் களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து விளையாட்டு வீரர்கள் தரப்பில் கூறும்போது,‘‘புதுச்சேரியில், உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கம் தவிர்த்து சொல்லும் படியாக வேறு மைதானம் இங்கு கிடையாது.பயிற்சிக்கு அங்கு தான் செல்ல வேண் டும். இல்லாவிட்டால் பள்ளிகளில் உள்ள மைதானம், பொது இடங்களில் தான் விளையாட வேண்டும்.
கிராமப்புற விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் திறமையை மேம்படுத்தவும், பயிற்சி பெறவும் வசதியாக இப்பகுதியில் (தவளக்குப்பம்) உள்விளையாட்டு அரங்கம் கட்டி திறக்கப்பட்டது. இதுஎங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத் தையும் கொடுத்தது. ஆனால், திறப்பு விழா செய்யப்பட்டு பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. பயிற்சி பெறுவது கடினமாக உள்ளது. இதனால் மாநிலஅளவிலான போட்டிகளில் கலந்து கொள் வது என்பது கூட எங்களுக்கு முடியாமல் போகிறது. எனவே உள்விளையாட்டு அரங்கை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.’’என்றனர்.
மேலும், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜீவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உள் விளையட்டு அரங்கம் மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. ஆனால் இதற்கான பிரதான சாலைகள் இருபுறமும் புதர்கள் மண்டியுள்ளன. இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடக்கவும் ஏதுவாக இருக்கிறது. எனவே இங்குள்ள சாலையில் மண்டிக்கிடக்கும் புதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்கின்றனர்.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரிக ளிடம் கேட்ட போது, “இந்த விளை யாட்டு அரங்கிற்கான ரப்பர் சீட் ப்ளோரிங்மேட் மற்றும் குறிப்பிட்ட சில விளை யாட்டு உபகரணங்கள் இன்னும் வாங்கப்பட வேண்டும். இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இவைகள் வாங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த உள் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றிலும் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன” என்று தெரிவிக்கின்றனர். ரூ.1.25 கோடி செலவில் இந்த பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.