பின்தங்கிய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேசத் தரத்திலான மருத்துவ வசதி ஏற்படுத்த மத்திய அரசு புதிய சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 8 மாதங்களுக்கு முன், டெல்லியில் இருந்து வந்த மத்திய சுகாதாரக் குழு, மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைப்பதற்கான சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து பார்வையிட்டது. அதுபோல், ஈரோடு, தஞ்சாவூர் மாவட்டங் களிலும் சில இடங்களை குழுவினர் பார்வையிட்டுள்ளனர். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் இன்னும் தேர்வு செய்யப் படவில்லை.
ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதால் 2009-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி முயற்சியால், எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வருவதற்கு மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அந்த மருத்துவமனை, தற்போது ஏற்கெனவே இடநெருக் கடியில் இருக்கும் மதுரை ராஜாஜி மருத்துவமனை எதிரே கட்டப்படுகிறது. அதனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம னையை காரணம் காட்டி தஞ்சாவூர் அல்லது ஈரோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு மருத்து வமனை மருத்துவர்கள் கூறிய தாவது: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு, அதிலும் மதுரைக்கு வராமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதும், தென் மாவட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் மவுனமும் முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, செங்கல் பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தடையில்லா போக்குவரத்துக்கு நான்குவழிச் சாலை மற்றும் ஏர்போர்ட் வசதி, தடையில்லா தண்ணீர் விநியோகத்துக்கு ஆற்று நீர் ஆதாரம், பெரும்பான்மை மாவட்ட மக்கள் பயன்படக்கூடிய மையப்பகுதியாக அமைந்திருக்கும் மாவட்டம் உள்ளிட்ட சில அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு தேவைப்படுகின்றன.
மத்திய சுகாதாரத் துறை சொல்லிய இந்த அத்தனை கட்ட மைப்பு வசதிகளும், மதுரையில் தாராளமாக இருக்கின்றன. தண்ணீர் வசதிக்கு வைகை ஆறு, தடையில்லா போக்குவரத்துக்கு ஏர்போர்ட், நான்குவழிச் சாலை, தென் மாவட்ட மக்கள் எல்லோரும் பயன்படக்கூடிய வகையில் மையப்பகுதியில் இருப்பது, மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கான சாதகமான விஷயங்கள்.
அதனால், தற்போது பரிந்து ரைப் பட்டியலில் இந்த வசதிகள் இல்லாத புதுக்கோட்டை தானாகவே இடம்பெற வாய்ப்பு இல்லை. செங்கல்பட்டு ஏற்கெனவே மருத்துவ தலைநகரமாக இருக்கும் சென்னைக்கு அருகில் இருப்பதால் அங்கும் செல்ல வாய்ப்பு இல்லை. மதுரையை ஒப்பிடும்போது ஈரோட் டில் அமைய வாய்ப்பு இல்லை.
தற்போது எய்ம்ஸ் மருத்து வமனை அமைவதற்கு வாய்ப்பு உள்ள மாவட்டமாக மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்கள் இருக்கின் றன. இதில் எந்த மாவட்டத்துக்கு எய்ம்ஸ் கிடைக்கப்போகிறது என்பதுதான் தற்போது பிரச் சினை. மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டியை காரணம் காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை வருவது தடுக்கப்படுவதாக தகவல் பரவுகிறது என்றனர்.
தென் மாவட்ட அரசியல்வாதிகள் மவுனம் களைந்தால் இந்த மருத்துவமனை மதுரைக்கு வர வாய்ப்பு உள்ளது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி வந்த ரகசியம்
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், அவசர அவசரமாக, மதுரை தோப்பூரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆனால், மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள், தோப்பூர் மிகவும் தூரமாக இருப்பதாகவும், தினமும் அங்கு சென்று வர இயலாது எனவும், எல்லா மருத்துவமனை துறைகளும், மருத்துவக் கல்லூரியும் ஒரே இடத்தில் செயல்பட்டால் மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவ மாணவர்கள் பயிற்சிக்கும் வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். அதனாலேயே, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது மதுரை ராஜாஜி மருத்துவமனை எதிரே கட்டப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.