மதுரை: அரசு ஐடிஐகளில் பயிற்றுநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்கும் அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேனியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அரசு ஐடிஐக்களில் கணினி பயிற்றுநர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பலரது ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஐடிஐ பயிற்றுநர் பணியிடத்தை தனியார் ஏஜென்சி மூலம் அவுட் சோர்சிங் முறையில் நிரப்புவது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலர் அக்.17ல் அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நீண்ட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எங்களைப் போன்ற பலர் பாதிப்பர். எனவே, பயிற்றுநர் பணியிடத்தை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எங்களையே தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, ஐடிஐ பயிற்றுநர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தார்.