மயிலாடுதுறை மாவட்டம் பன்னீர்கோட்டகம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேற்று பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. 
தமிழகம்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கருக்கு ரூ.30,000, குடும்ப அட்டைக்கு ரூ.3,000 வழங்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். சீர்காழி அருகேயுள்ள நல்லூர், பன்னீர்கோட்டகம், ஆலங்குடி, வேட்டங்குடி, சூரக்காடு, நெய்தவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், விளைநிலங்களை பார்வையிட்ட அவர், அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகளிடம் பாதிப்புகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சீர்காழி, தலைச்சங்காடு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர், தலைச்சங்காட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். தரங்கம்பாடி, சீர்காழி வட்டங்களில் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்குவதுடன், பாதிக்கப்பட்டுஉள்ள மயிலாடுதுறை, குத்தாலம் வட்டங்களில் உள்ள மக்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டும். திருவாலி ஏரி உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பாசன, வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரி மழைநீரை வடியச் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பயிர் பாதிப்புகள் குறித்து முறையாகக் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு: இதேபோன்று,கடலூர், சிதம்பரம், வல்லம்படுகை பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட அவர், பின்னர் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

SCROLL FOR NEXT