சென்னை: சென்னை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் மின்கசிவு காரணமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் எதிரே பழைய மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் தற்போது சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதி வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்து நேற்று மாலை திடீரென கரும்புகை வெளியேறியது. அதைத் தொடர்ந்து அறை முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஜெனரேட்டர் அறையில் இருந்த2 ஜென்செட்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணை யில் தெரியவந்தது. ஜெனரேட்டர் அறை இருந்த கட்டிடம், மருத்துவக் கல்லூரி பிரதான கட்டிடங்களுக்கு பின் சற்று தள்ளி இருப்பதால் மருத்துவக் கல்லூரி விடுதியிலும், மருத்துவமனையிலும் தீ விபத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜெனரேட்டர் அறையில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமானது.