ஈரோடு: பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பழங்குடியினர் வீட்டில் களி உணவு சாப்பிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, ‘சாதிச்சான்று தொடர்பான அவர்களது கோரிக்கை நிறை வேற்றப்படும்’ என உறுதியளித்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று முன் தினம் நடந்த, பால் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். தொடர்ந்து பர்கூர் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் தாமரைக்கரை பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வசிப்பவர்கள், ‘இப்பகுதியில் வசிப்பவர்கள் சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும், மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல், மலையாளி என சாதிச்சான்றிதழ் வழங்க வேண் டும்’ என கோரிக்கை விடுத்தனர். அப்போது, மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், அண்ணாமலையின் காலைத் தொட்டு, ‘இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’ என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
உடனே, அவரின் காலைத் தொட்டு வணங்கிய அண்ணாமலை, அவரை தன் தோளில் சாய்த்துக் கொண்டு, ‘உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்கிறோம்’ என்று உறுதியளித்தார். தொடர்ந்து சோளகர் சமூகத்தைச் சேர்ந்த மலை வாழ் மக்களான பூமிகா -வெள்ளையன் தம்பதி வீட்டில், மதிய உணவாக களி உணவு சாப்பிட்ட அண்ணாமலை, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.