தமிழகம்

இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா சென்னையில் இன்று தொடக்கம்: திருமாவளவன், தா.பாண்டியன் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ஓராண்டு கொண்டாடுகிறது தமிழக காங்கிரஸ்

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி யின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக காங்கிரஸ் சார்பில் ஓராண்டு காலத்துக்கு கொண்டா டப்பட உள்ளது. சென்னையில் இன்று நடக்கும் தொடக்க விழா வில் தா.பாண்டியன், திருமாவள வன், டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்தார். அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை இன்று தொடங்கி, 2017 நவம்பர் 19-ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் கொண்டாட காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழக காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலை மையில் 32 பேர் குழு அமைக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’ விடம் திருநாவுக்கரசர் கூறும் போது, ‘‘இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஓராண்டு காலத்துக்கு கருத்தரங் கம், கவியரங்கம், பொதுக்கூட்டம், பிரச்சாரப் பயணம், புகைப்படக் கண்காட்சி, பாதயாத்திரை, சிறப்பு மலர், குறுந்தகடுகள் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்நிலையில், இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் முகைதீன், காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஜி.சின்னா ரெட்டி, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

SCROLL FOR NEXT