காட்பாடியில் ரயில் பயணிகளிடம் நகை கொள்ளையடித்த வழக்கில், செல்போன் டவர்களில் பதிவான அழைப்புகளின் பட்டியலை சேகரித்து தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகே சிக்னல் கருவியை சேதப்படுத்திய கும்பல், நீலகிரி விரைவு ரயில் மற்றும் காவேரி விரைவு ரயிலில் பெண் பயணிகளிடம் 13 பவுன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையர் அஷ்ரப் மற்றும் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் நேரில் விசாரித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள 6 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்நிலையில், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் வேலூரில் தங்கி தனிப் படையின் செயல்பாட்டை முடுக்கி விட்டுள்ளார். மேலும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, இரவு நேர ரயில்களில் பாதுகாப்புப் பணிக்காக வேலூர் மாவட்ட போலீஸாரையும் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
தனிப்படை போலீஸார்
இது தொடர்பாக, போலீஸார் கூறும்போது, ‘‘அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள் இடையில் இரவு நேரங்களில் பாதுகாப்பு மேற்கொள்ள தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. கொள்ளையர் களைப் பிடிக்க உத்தரப்பிரதேச மாநில போலீஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது. ஒரு தனிப் படை போலீஸார் அங்கு தங்கி விசாரிக்கின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் இருக் கும் செல்போன் டவரில் பதிவான அழைப்புகள் குறித்த பட்டியலை சேகரித்து விசாரிக்கின்றனர்’’ என்றார்.
இதுகுறித்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறும்போது, ‘‘காட்பாடியில் நடந்த சம்பவம் தொடர்பாக அண்டை மாநில போலீஸாரிடம் தகவல் பரிமாறியுள்ளோம். குற்ற வாளிகளைப் பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்’’ என்றார்.