தமிழகம்

புயல் மழையின் போது மின்விபத்தைத் தடுக்க 6 பாதுகாப்பு அம்சங்கள்: மின்வாரியம்

செய்திப்பிரிவு

புயல் மழையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு உள்ளிட்ட சேதங்களை தடுப்பதற்காக மின்வாரியம் 6 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ''வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், புயல் மற்றும் மழையால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படாத வகையில் பொது மக்கள் விழிப்புடன் முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. வீட்டிற்கு வெளியே மற்றும் வயல் வெளிகளுக்கு செல்லும் போது மின் கம்பம் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்து கீழே உள்ளதா, என்பதை கவனித்து செல்ல வேண்டும்.

2. மின்கடத்திகள் அல்லது மின்கம்பிகள் அறுந்து கிடப்பது தெரிந்தாலோ மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின்பொறி தென்பட்டாலோ உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

3. மழை மற்றும் காற்றின் போது குழந்தைகளை மின்கம்பம் அருகே செல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

4. மின்கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டவேண்டாம்.

5. மழைநீரில் நனைந்த மின் உபகரணங்கள் அதாவது குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் இதர மின்சாதனங்களை முழுவதும் உலர்ந்துள்ளதா என்று உறுதி செய்த பின்பு அருகில் உள்ள எலக்டீரீஷியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதித்த பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

6. நீரில் நனைந்த மின்ஒயர்கள் செல்லும் ஒயரிங், ஈரம் உள்ள சுவர் ஆகியவற்றில் மின்கசிவு இருக்க வாய்ப்புள்ளதால் ஈரமான சுவர்களை தொடவேண்டாம். சுவரில் ஈரம் இருப்பின் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்து, எலக்டீரீஷியனை வரவழைத்து முழுவதுமாக சரிபார்க்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT