தமிழகம்

அடுத்த ஆண்டு எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள்? - வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது யுபிஎஸ்சி

செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகள் யுபிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன மத்திய அரசு பணிகளுக்கு எந்தெந்த போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (Annual Planner) யுபிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதில், போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், விண்ணப்பிப்பதற்கான காலக் கெடு, எழுத்துத்தேர்வு நாள் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மத்திய அரசு பணிகளில் சேர விரும்புவோர் தேர்வுக்கு முன் கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு இந்த தேர்வு கால அட்டவணை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இந்த நிலையில், 2017-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையை யுபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். சிஐஎஸ்எப் உதவி கமாண்டன்ட் (நிர்வாகம்), ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வு, சிவில் சர்வீசஸ் தேர்வு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) உதவி கமிஷனர் தேர்வு, மத்திய போலீஸ் படை உதவி கமாண்டன்ட் தேர்வு உள்பட 16 வகையான போட்டித்தேர்வுகள் அட்டவணையில் இடம் பெற்றுள்ளன. இவை மட்டுமின்றி கூடுதலாக நேரடி தெரிவு (Selection) மூலமாகவும் குரூப்-ஏ பணிகளுக்கும் குறிப்பிட்ட சில குரூப்-பி பணிகளுக்கும் தேர்வு நடத்துவதாகவும் இதுதொடர்பான விவரங்கள் அவ்வப்போது இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுமாறும் தேர்வர் களை யுபிஎஸ்சி அறிவுறுத்தி யுள்ளது.

வெளியீடு எப்போது?

யுபிஎஸ்சி வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசு பணிகளுக்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் தேர்வு செய்யும் டிஎன்பிஎஸ்சி எப்போது தேர்வு கால அட்டவணையை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் தேர்வர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி களிடம் கேட்டபோது, வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, தொழி லாளர் அதிகாரி, ஜெயிலர், சுற்றுலா அதிகாரி உள்ளிட்ட தேர்வுகளுக்கு அறிவிப்புகூட இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அறிவிக்கப்படாத தேர்வுகளுக்கு அறிவிப்பை வெளியிட்டு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி எப்போது ஆட்களைத் தேர்வு செய்யப்போகிறார்கள் என்று தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

SCROLL FOR NEXT