சென்னை: சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களை (பார்க்கிங் இடத்தை) விரிவுபடுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது விமான நிலையம் - விம்கோ நகர் வரை முதல் வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல்-பரங்கிமலை வரை 2-வது வழித்தடத்திலும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 41 நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்கின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 1.90 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். வார இறுதி நாட்களில் 2.50 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
கோயம்பேடு, ஆலந்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பல மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பேரும், மீனம்பாக்கத்தில் தினமும் 6 ஆயிரம் பேரும், நங்கநல்லூரில் தினமும் 2 ஆயிரம் பேரும்பயணிக்கின்றனர். இந்த 3 நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில், இந்த 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களை விரிவுபடுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகன நிறுத்தம் அண்மையில் அகற்றப்பட்டது. இது, பல பயணிகளை எரிச்சலடையச் செய்துள்ளது. எனவே, இந்திய விமான நிலைய ஆணையத்துடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வாகனம் நிறுத்த கூடுதல் இடத்தை ஒதுக்கக் கோரிக்கை வைத்தோம். அவர்களிடம் மீனம்பாக்கம் நிலையம் அருகே நிலம் கேட்டுள்ளோம்.
விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் குறைவாக இருப்பதால், மீனம்பாக்கம் அல்லது நங்கநல்லூர் போன்றஅருகிலுள்ள நிலையங்களுக்கு பல பயணிகள் செல்ல வேண்டியகட்டாயம் உள்ளது அந்த நிலையங்களில் கூட, தாமதமாகச் சென்றால்வாகனங்களை நிறுத்த பயணிகளுக்கு இடம் கிடைக்காத நிலைஉள்ளது. எனவே, 3 நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடவசதியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தேவைப்படும் இடங்களில், வாகன நிறுத்துமிடத்தை அதிகரிக்க, நிலத்தை குத்தகைக்கு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு, ஆலந்தூர் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் வாகன நிறுத்துமிடத்தை விரிவு படுத்துவதற்கான நிலம் மற்றும் பிற தேவைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.