சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை கைவிட்டு மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் கற்பிக்கும் பணியை தொடங்க வேண்டும்.
ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும், ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மு.லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன், பொருளாளர் இரா.குமார்உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முதல்வரின் கோரிக்கையை ஏற்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசு வழிசெய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.