சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின்போது, இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், தேசிய செயலாளர் வல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய்வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் ஒற்றுமை யாத்திரையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதியிலும் 100 கொடிகள் ஏற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் ஏராளமான வாகனங்களில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்தகே.எஸ்.அழகிரியை அவர்கள்முற்றுகையிட்டனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட 3 வட்டார தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பிரச்சினை குறித்து முறையாக விசாரிக்கப்படும் எனகூறி அவர்களை அழகிரி சமாதானப்படுத்தினார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட கே.எஸ்.அழகிரியை காங்கிரஸார் மீண்டும் முற்றுகையிட்டனர். அவரை கட்சியின் எஸ்சி பிரிவுதலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர். அப்போது, இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில், களக்காடு நகராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, டேனியல், ராபர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் விலக்கிவிட்டனர். சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.