வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்ததாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மத்திய வங்கக் கடலில் கடந்த 12-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, அதே பகுதியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை அல்லது தூரல் ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம், சென்னை, மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ, சேரன்மாதேவி, ஸ்ரீகாளி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.