தமிழகம்

கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்திப்பு: ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் சந்தித்தனர்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை காரணமாக கடந்த இரு வாரங்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடம்பில் கொப்புளங்கள் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களைச் சந்திப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.

உடல்நலம் சீராகும் வரை கருணாநிதியைப் பார்க்க யாரும் நேரில் வர வேண்டாம் என திமுக தலைமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் கடந்த 1-ம் தேதி கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று அங்கிருந்த ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு தனது மனைவி காந்தியுடன் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்த அழகிரி, தந்தை கருணாநிதியிடம் உடல்நலம் விசாரித்தார். அப்போது கருணாநிதியின் மூத்த மகள் செல்வியும், குடும்பத்தினரும் உடனிருந்தார்.

சிறிது நேரத்தில் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு, மகள் கனிமொழி ஆகியோரும் அங்கு வந்தனர். சுமார் 30 நிமிடங்கள் தந்தையிடம் அழகிரி பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் உடல்நலமில்லாமல் இருக்கும் தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்து அழகிரி நலம் விசாரித்தார். சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வந்த அழகிரி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார்’’ என்றார். 3 தொகுதி தேர்தல் உள்ளிட்ட மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அழகிரி புறப்பட்டுச் சென்ற அரை மணி நேரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். நேராக கருணாநிதியின் அறைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் 3 தொகுதி தேர்தல் நிலவரங்கள், பிரச்சாரம் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT