இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கால்வாயில் தண்ணீர் செல்வதால் கிராமமே தீவாக மாறியுள்ளது. இதனால் மக்கள் கால்வாயைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
இளையான்குடி அருகேயுள்ள மேலாயூர் ஊராட்சி சிங்கத்து ரைப்பட்டியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 20 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் சுப்பன் கால்வாய் செல்கிறது. இப்பகுதி மக்கள் கால்வாயைக் கடந்துதான் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். இதனால், கால்வாயில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
வட கிழக்குப் பருவமழையால் இக்கால்வாயில் தொடர்ந்து 3 வாரங்களாக தண்ணீர் செல்கிறது. இதனால், மக்கள் கால்வாயைக் கடக்கச் சிரமப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கோகுல் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கண்மாய்களில் இருந்து உபரி நீர் திறப்பதாலும் கால்வாயில் தண்ணீர் அதிகமாகச் செல்கிறது.
உடல்நலம் பாதித்தோரை கால்வாயைக் கடந்து கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது. பாலம் கேட்டு 7 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம், என்றார்.