தமிழகம்

தென்காசி | மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக் கோரி திரண்ட பொதுமக்கள்

செய்திப்பிரிவு

தென்காசி: மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக் கோரி பெண்கள்உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 329 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாாியம் மூலம் 107 தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாாிய உறுப்பினா் அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன், ஆட்சியாின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரம், அருணாசலபுரம், கே.எம்.அச்சம்பட்டி, கே.எம்.மீனாட்சிபுரம், வடநத்தம்பட்டி, பாறைகுளம், பெரியசாமிபுரம், வீரசிகாமணி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் சார்பில் பாலமுருகன் என்பவர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ‘அருணாசலபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த கடைபொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருந்தது. அமைதியான முறையில் பொதுமக்கள் மதுபானம் வாங்கிச் சென்றனர். இந்நிலையில், இந்த கடை திடீரென மூடப்பட்டுவிட்டது.

இதனால் அருணாசலபுரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட தூரம்பயணம் செய்து, சேர்ந்தமரத்துக்கு சென்று மதுபானம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே, மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனுக்கள் அளித்து வரும் நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக் கோரி பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு மனு அளிக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT