மதுரை: தொடர் மழையால் 16,400 கன அடி தண்ணீர் வருவதால் மதுரை வைகை ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. மதுரை உட்பட தென்மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பெரியாறு, வைகை நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணைக்கு 1,109 கன அடி தண்ணீர் வருகிறது. அதனால், அணையின் நீர்மட்டம் 137 அடியாக உயர்ந்துள்ளது.
வைகை அணைக்கு 5,829 கன அடி தண்ணீர் வருகிறது. அதனால், வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து வைகை அணையில் இருந்து நேற்று முதல் 4,230 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரும், அதன் கிளை நதிகள், வழித்தடங்களில் பெய்யும் மழை நீரால் வைகை ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு 16,400 கன அடி தண்ணீர் நேற்று சென்றது.
தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததால் மதுரை யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது. வைகை கரையின் இருபுறம் அமைக்கப்பட்டுள்ள சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்தது. அதனால், இந்த சாலைகளில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் போலீஸார், கரையோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆரப்பாளையம்-செல்லூர் பாலம் அருகே வைகை ஆற்றில் 4 குதிரைகள் ஒரு மேட்டுப்பகுதியில் சிக்கிக் கொண்டன. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார், மதுரை நகர் நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு நேற்று மாலை சென்று 4 குதிரைகளையும் மீட்டனர்.