திருச்செங்கோடு கொல்லப்பட்டியில் உள்ள வயலில் தேங்கியுள்ள மழை நீர். 
தமிழகம்

திருச்செங்கோடு அருகே விளை நிலங்களில் தேங்கிய மழை நீர்

செய்திப்பிரிவு

நாமக்கல்: திருச்செங்கோடு கொல்லப்பட்டியில் உள்ள விளைநிலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் விளைநிலங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருச்செங்கோடு கொல்லப்பட்டி சுற்றுவட்டாரத்தில் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது.

தொடர் மழை காரணமாக இங்குள்ள விளைநிலங்களில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து தேங்கியுள்ளது. இதனால், நிலத்தடி நீரும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “கொல்லப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரும், மழைநீரும் சேர்ந்து விளைநிலங்களில் தேங்கியுள்ளது.

இதனால், புதிதாக நடப்பட்ட தென்னங்கன்றுகள் சேதமடைந்துள்ளன. இந்த தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT