சேலத்தில் பெய்த தொடர் மழையால் சிவதாபுரம் எம்ஜிஆர் காலனி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. குளம் போல தேங்கியுள்ள மழைநீரில் தடுமாறிச் செல்லும் மூதாட்டி. படம்: எஸ். குரு பிரசாத் 
தமிழகம்

சேலம் சிவதாபுரத்தில் வீடுகளை சூழ்ந்த மழை நீர்: வடிகால் வசதியை மேம்படுத்த மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சிவதாபுரத்தில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விடாமல் பெய்யும் மழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் சிவதாபுரம் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை விடிய விடிய வடித்து மக்கள் அவதிப்பட்டனர்.

சிவதாபுரம் பகுதியில் போதிய வடிகால் வசதியில்லாததால், கனமழையின்போது வீடுகளை மழை நீர் சூழ்வதும், வீடுகளுக்குள் புகுவதும் வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மழை நீர் உடனடியாக வடிந்தோடும் வகையில் வடிகால் வசதியை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல, தலைவாசல், தம்மம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், சங்ககரி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் ஏரி, குளங்கள், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஏற்காட்டில் கடும்பனி மூட்டத்துடன் மழை பெய்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன. மேலும், கடும் பனியால் சுற்றுலாப் பயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் விடுதிகளில் முடங்கினர்.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): தம்மம்பட்டி 48.2, கெங்கவல்லி 44.4, ஆத்தூர் 30, கரியகோவில் 24, பெத்தநாயக்கன்பாளையம் 23, ஆணைமடுவு 13, சங்ககிரி 7.3, ஏற்காடு 7.2, மேட்டூர் 5.5, எடப்பாடி 5.4, சேலம் 5, காடையாம்பட்டி 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT