தமிழகம்

பயிர்க் கடன், வட்டி மானியம் வழங்க முடியவில்லை: 500, 1000 ரூபாய் செல்லாது அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் முடக்கம் - ரிசர்வ் வங்கி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், தமிழக கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளதுடன் பயிர்க்கடன், வட்டி மானியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித் தார். மக்கள், தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். ரூ.4 ஆயிரம் வரை புதிய நோட்டு களாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை வாங்கவும் விநியோ கிக்கவும் ரிசர்வ் வங்கி அனு மதிக்க வில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் துறை செயலர் பிரதீப் யாதவ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன், கூடுதல் பதிவாளர் த.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரிசர்வ் வங்கி கடந்த 8-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் மூலம், புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் தாங் கள் ஏற்கெனவே பெற்றிருந்த பயிர்க்கடனுக்கான தொகையை உரிய காலத்தில் செலுத்த முடிய வில்லை. கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் புதிய வைப்பீடுகளை பெற முடியவில்லை.

பயிர்க்கடன்கள் மற்றும் இதர கடன்களை வசூலிப்பதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத் தில் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யப்படும் சம்பா பருவகாலம் தொடங்கியுள்ள நிலையில் புதிய பயிர்க்கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் உரிய காலத்தில் பயிர்க்கடன் தொகையை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு அரசின் சலுகை யாக ரூ.910 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி யாண்டுக்கு வட்டி மானியம் மற்றும் ஊக்கத்தொகைக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய தவணை தேதிக்கு முன்பு பயிர்க்கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 7 சதவீத வட்டி மானியம் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 7-ம் தேதி வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 612 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 75 கோடியே 41 லட்சம் மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், பயிர்க்கடன் வழங்குவதில் இலக்கை எட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படும்.

கிராமப்புற மக்களில் பெரும் பாலானவர்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க சேமிப்பு கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய் வதைப்போல கூட்டுறவு கடன் சங் கங்களில் செலுத்த முடியவில்லை. இதனால் புதிய வைப்பீடுகள் எதை யும் பெற முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்து வருவாய் பாதிப்பை சந்தித்துள்ளன. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் இழக்கும் நிலை

மேலும் கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப் பின்படி, மத்திய கூட்டுறவு வங்கி கள், எவ்வித பணப் பரிவர்த் தனையோ, சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 813 கிளைகள், அவற்றின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழக மக்களுக்கு சேவைகளை அளிக்க இயலாமல் முடங்கியுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT