தமிழகம்

தொடர் மழையால் வரத்து குறைந்து விலை உயர்வு: மதுரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100

செய்திப்பிரிவு

மதுரை: தொடர் மழையால் மதுரை சந்தைகளில் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து, நேற்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல இடங்களில் அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்துவிட்டது. மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டுக்கும், கீழமாரட் வீதியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கும் சின்ன வெங்காயம் வரத்து சரிந்து விலை அதிகரித்துவிட்டது.

இது தொடர்பாக கீழமாரட் வீதி சின்ன வெங்காய வியாபாரி கண்ணன் கூறுகையில், இங்கு தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். தொடர் மழையால் செடிகள் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காய வரத்து குறைந்துவிட்டது.

தற்போது பழைய சின்ன வெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரையும், புதிய சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

SCROLL FOR NEXT