மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில், நடமாடும் வங்கி மையங்கள், ஏடிஎம்கள், வங்கி ஊழியர்கள் வாயிலாக பணப் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
நாடு முழுவதும் கடந்த 8-ம் தேதி இரவுடன் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பல்வேறு தரப்பினரும் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இந்நிலையில், இதனால் மீனவர் களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மீன் வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். மீனவர்களின் வாழ்வாதா ரம் பாதிக்காத வகையில் அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளப் பகுதிகளில் நடமாடும் தானியங்கி பணப் பட்டுவாடா வங்கி மையங்கள் (மொபைல் பேங்கிங் கவுன்டர்) அமைக்க வேண்டும். மீனவப் பகுதிகளுக்கு அருகே உள்ள ஏடிஎம்களில் போதிய பணம் இருப்பை உறுதி செய்ய வேண்டும். வங்கிகளின் வணிக தொடர்பாளர்கள் மூலமாகவும் பணப் பட்டுவாடா செய்ய வேண்டும்’’ என்றார்.
இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவர்களுக்குச் சிறந்த சிகிச்சை, உதவிகள் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீன்வளத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பீலா ராஜேஷ், முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணைப் பொது மேலாளர் வத்சவா, வங்கி மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.