கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
தமிழகம்

தென்பெண்ணையாறு, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மற்றும் குப்பநத்தம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால், தாழ்வானப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பநத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குப்பநத்தம் அணைக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணை யில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் விநாடிக்கு வந்த 1,500 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டன. இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைய தொடங்கியதால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது நேற்று படிப்படியாக குறைந்தது. 59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 54.25 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 228 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல், சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 4,500 கனஅடியும், காய்வாயில் விநாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 4,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்வளத் துறையினர் அறிவுறுத்தினர்.

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளன.

ஒரே நாளில் 17 ஏரிகள்: தி.மலை மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி முழுமையாக நிரம்பின. ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் நேற்று காலை 6 மணி நில வரப்படி 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளன.

ஜவ்வாதுமலையில் 65 மி.மீ.,: திருவண்ணாமலை மாவட் டத்தில் நேற்று காலை நிலவரப் படி, 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ஜமுனாமரத்தூரில் (ஜவ்வாது மலை) 65 மி.மீ., மழை பெய்துள்ளது.

ஆரணியில் 34, செய்யாறில் 37, செங்கத்தில் 32.2, வந்த வாசியில் 47.9, போளூரில் 26, திருவண்ணாமலையில் 26.4, தண்டராம்பட்டில் 8.5, கலசப்பாக் கத்தில் 61.4, சேத்துப் பட்டில் 25.7, கீழ்பென்னாத்தூரில் 63.6, வெம்பாக்கத்தில் 24.5 மி.மீ. என மாவட்டத்தில் சராசரியாக 38 மி.மீ., மழை பெய்துள்ளன.

SCROLL FOR NEXT