தமிழகத்தின் மொத்த விதை நெல் உற்பத்தியில் 50 சதவீதத்தை உற்பத்தி செய்து, ‘விதைக் களஞ்சியம்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது தாராபுரம்.
மாநிலத்தில் கடந்த 2010-11-ம் ஆண்டில் நெல் உற்பத்தி 70 லட்சம் டன்னாக இருந்தது. தற்போது, அது 130 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சான்று பெற்ற விதைகள், அதிக முளைப்பு திறன், புறத் தூய்மை, இனத் தூய்மை மற்றும் அளவான ஈரப்பதம் கொண்ட விதை நெல் ரகங்களே அதிக விளைச்சல் தரும் என்று கருதப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மற்றும் ஈரோடு மாவட்டம் கீழ்பவானி அணையை நம்பி ஏராளமான விவசாயிகள், விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நடப்பாண்டில் போதிய அளவுக்கு தென்மேற்குப் பருவமழை இல்லாததால், அணைகளில் போதிய நீர்இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடகிழக்குப் பருவமழை மட்டுமே கைகொடுக்கும் என்று விவசாயிகளும், விதை நெல் உற்பத்தியாளர்களும் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விதைச் சங்க மாநிலச் செயலாளர் சி.காளிதாஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களின் விதை தேவை ஆண்டுக்கு 1.50 லட்சம் டன்னாக உள்ளது. அவற்றில் சுமார் 85 ஆயிரம் டன் தமிழகத்திலும், சுமார் 55 ஆயிரம் டன் அண்டை மாநிலங்களில் இருந்தும் பெறப்படுகிறது. இவற்றில் 20 சதவீதத்தை அரசும், மீதியை தனியாரும் உற்பத்தி செய்கின்றனர்.
தற்போது 15 வகையான குறுவை மற்றும் சம்பா ரகங்கள் நடவு செய்யப்படுகின்றன. நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு அறிவித்திருந்தும், தமிழக அரசு இடைக்கால செலவுத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிடாததால், நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர்த் தட்டுப்பாடு
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கியபோதும், தாராபுரத்தில் இருந்துதான் தஞ்சை உட்பட 7 மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் விநியோகிக்கப்படுகிறது.
அமராவதி மற்றும் கீழ்பவானி அணைகளில் இருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாததால், விதை நெல் உற்பத்தி எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மத்திய அரசு வழங்கும் ஆதார விலையை விகிதாச்சார அடிப்படையில் வழங்குவதற்குப் பதிலாக சதவீத அடிப்படையில் வழங்கினால், அத்திட்டம் விவசாயிகளுக்கு பலனளிக்கும்.
தமிழகத்தின் தேவையில் 50 சதவீத விதை நெல் உற்பத்தியை திருப்பூர் மாவட்டம் அளித்தபோதும், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகம், பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரசின் உதவிகளுக்கு விவசாயிகள் பழைய கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் அடிப்படையிலேயே அலுவலர்களை நாடவேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த குறைபாடுகளைக் களைந்தால், உணவு உற்பத்தியில் தமிழகம் தலைநிமிர்வதோடு, அரிசி தட்டுப்பாட்டுக்கும் வாய்ப்பு எழாது என்றார்.
கோவை மாவட்ட விதைச் சான்றுத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் கூறும்போது, “தமிழகத்தில் 20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த விதை நெல் தேவையில் பெரும்பகுதி தாராபுரத்தில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது.
பாரம்பரிய சாகுபடி முறையில் ஹெக்டேருக்கு 75 கிலோவும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 7.5 கிலோவும், இயந்திர நடவு மூலம் 45 கிலோவும் தேவைப்படுகிறது.
எஸ்.ஆர்.ஐ. முறையில் தொழில்நுட்பப் பணியாளர்களின் தேவை அதிகம் என்பதால், 20 சதவீத விவசாயிகள் இந்த முறையைக் கடைபிடிக்கின்றனர்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால், அங்கு நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழையை பொறுத்தே தமிழகத்தின் மொத்த நெல் உற்பத்தியும் இருக்கும் என்று தெரிகிறது. பல்லடத்தில் விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகம் அமைப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க முடியும்” என்றார்.