தமிழகம்

காரைக்குடி அருகே ரயில்வே மேம்பாலப் பணி நிறைவு: கிராம மக்களுக்கு விருந்தளித்த ஒப்பந்ததாரர்

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி அருகே ரயில்வே மேம்பாலப் பணி நிறைவடைந்ததால், கிராம மக்களுக்கு கிடா வெட்டி ஒப்பந்ததாரர் அசைவ விருந்து வைத்தார். திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி, காரைக்குடி இடையே சாலை விரிவாக்கப் பணி 10 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு காரைக்குடி, ராமநாதபுரம் இடையே 80 கி.மீ.க்கு ரூ.360 கோடியில் சாலை விரிவாக்கப்பணி தொடங்கியது. இப்பணியை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது.

இச்சாலையில் காரைக்குடி அருகே ரஸ்தா, தேவகோட்டை அருகே பச்சைவயல், புளியால் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கைகாட்டி, தேவிபட்டினம், சோழாந்தூர் ஆகிய இடங்களில் பாலப் பணிகள் நடந்தன. இதில் கரோனாவால் காரைக்குடி ரஸ்தா பகுதியில் நடைபெற்று வந்த ரயில்வே மேம்பாலப் பணி மட்டும் முடிவடையாமல் இருந்தது. மற்ற இடங்களில் பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. தற்போது ரூ.14 கோடியில் ஒரு கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட காரைக்குடி ரஸ்தா பாலப் பணியும் முடிவடைந்துள்ளது. 2022 ஜனவரியில் பாலம் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு ஒப்பந்ததாரர் கிடா வெட்டி விருந்து வைத்தார். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT