தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசனின் நேர்முகச் செயலாளர் இன்று வெளியிட்ட அறிக்கையில், '' இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் கடந்த 7-ம் தேதி சந்தித்தார்.
அப்போது, 'தமிழகத்தில் 3 போக சாகுபடி நடந்த நிலையில் தற்போது ஒரு போக சாகுபடிக்கே விவசாயிகள் ஏங்கி நிற்கின்றனர். கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதால் விவசாயம் பொய்த்துள்ளது. இதனால் விவசாயக் கடனை கட்ட முடியாமலும், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இரு நாட்டுக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என்பதும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. இந்த சூழலில், இலங்கை சிறையில் உள்ள 19 மீனவர்களையும், 115 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
படகுகள் சேதமடைந்துள்ளதால் அவைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். கச்சத்தீவில் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்று குடியரசுத் தலைவரிடம் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.