தமிழகம்

வேலூர் சிறையில் இருந்து இன்று விடுதலையாகும் நளினி: முருகன் விடுதலையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்

செய்திப்பிரிவு

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள வீட்டில் தாயார் பத்மாவுடன் தங்கியுள்ளார். அவருக்கு, இதுவரை 10 முறை பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் முருகனும், சாந்தனமும் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மருத்துவ காரணங்களுக்காக பரோலில் உள்ளார். சென்னை புழல் சிறையில் ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 பேர் விடுதலையை தொடர்ந்து பரோலில் உள்ள நளினியின் வீட்டுக்கு காவல் துறை பாதுகாப்பு நேற்று பிற்பகல் அதிகரிக்கப்பட்டது. அவர்கள் யாரும் செய்தியாளர்களிடம் பேச வேண்டாம் என காவல் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

முருகனுக்கு தாமதம்: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நளினி இன்று காலை பெண்கள் சிறைக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. அங்கு விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திடுவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை முடித்துக்கொண்டு 31 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் இருந்து விடுதலை ஆவார் என சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், நளினியின் கணவர் முருகன் மீது சிறையில் பெண் அதிகாரியிடம் ஆபாசமான முறையில் நடந்துகொண்ட வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெறாத நிலையில் முருகன் விடுதலை மட்டும் தாமதமாகும் என கூறப்படுகிறது. முருகன் விடுதலையை விரைவில் உறுதிப்படுத்த அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சாந்தன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் அவரை விடுதலை செய்தாலும் இந்தியாவில் எங்காவது அவர் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக நாடு திரும்புவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மூவரின் விடுதலை தொடர்பாக தமிழக உள்துறையின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம். முருகன் மீதான வழக்கில் இதுவரை அவரை கைது செய்யவில்லை. எனவே, அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்தும் நீதிமன்றம், காவல் துறையின் ஆலோசனையை கேட்டு வருகிறோம்’’ என்றனர்.

இதற்கிடையில், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் சற்றும் சாந்தனை வழக்கறிஞர் ராஜகுரு நேற்று சந்தித்தார்.இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘முருகன் விடுதலையானதும் காட்பாடியில் சில நாட்கள் தங்கியிருந்து லண்டன் செல்வது குறித்து ஆலோசிக்கவுள்ளனர். சாந்தன் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு இலங்கை செல்ல தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்’’ என்றார்.

SCROLL FOR NEXT