பொதுமக்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்த பிரதமர் மோடி 
தமிழகம்

திண்டுக்கல் | காரில் இருந்தபடி கையசைத்த பிரதமர் மோடி - மக்களைக் கண்டு உற்சாகம்!

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பிரதமர் மோடி காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் காந்தி கிராம பல்கலைக்கழகத்துக்கு சென்றடைந்தார்.

பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சென்று அங்கிருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார். மோடி வருகையின் காரணமாக சின்னாளபட்டி, காந்தி கிராம பல்கலைக்கழக பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக, ஹெலிபேட் தளத்தில் இருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் வழியில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான பாஜகவினர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, காத்திருந்த பொதுமக்களை பார்த்தவுடன், காரில் இருந்து வெளியே வந்து கூடியிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தார்.

முன்னதாக, மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி , மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஹெச்.ராஜா, பாஜக மகளிரணி நிர்வாகி மகாலெட்சுமி, பாஜகவினர் ஓபிஎஸ் தலைமையில் எம்பிக்கள் ரவீந்திரநாத், தர்மர், எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், ஐயப்பன், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

SCROLL FOR NEXT