திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வந்த கட்சித் தொண்டர்களை தீவிர சோதனைக்கு பின் போலீஸார் அனுமதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மற்றும் முதல்வரை வரவேற்பதற்காக பல்கலைக்கழகத்தின் எதிர்ப்புறம் உள்ள சாலையில் பாஜக மற்றும் திமுகவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பாதுகாப்பு கருதி கட்சியினர், பொதுமக்கள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின் போலீசார் அனுமதித்தனர். தீப்பெட்டி, தண்ணீர் பாட்டில், கருப்பு குடை போன்ற பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. அவற்றைக் கொண்டு வந்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.