சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் நேற்று 43 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில், வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத அடிப்படைவாதிகள், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
கோவை உக்கடம் அல் அமீன் காலனி, ஜி.எம். நகர், எச்.எம்.பி.ஆர். வீதி, போத்தனூர், ரோஸ் கார்டன், குனியமுத்தூர், குறிச்சி, செல்வபுரம், புல்லுக்காடு என 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கொச்சி, சென்னையில் இருந்து கோவை வந்த என்ஐஏ அதிகாரிகள், நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். உயிரிழந்த முபினின் உறவினர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், செல்போன்், லேப்டாப், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் சொக்கலிங்கம் நகரில் உள்ள அல் பாசித்(22) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பட்டதாரியான அல் பாசித், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். அவரது வீட்டில் 2 செல்போன்கள், சிம்கார்டுகள், பென் டிரைவ் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முபினின் மைத்துனர் முகமது யூசுப், திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரை திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போலீஸார், 3 மணி நேரத்துக்குப் பின்னர் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையைச் சேர்ந்த உமர் பரூக் (35) என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட கார், சென்னையில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனடிப்படையில், புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவைச் சேர்ந்த முகமது நிஜாமுதின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர், புதுப்பேட்டையில் பழைய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். அவரது செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, மண்ணடி இப்ராஹிம் தெருவைச் சேர்ந்த ராஜா முகமது, ஓட்டேரி ஜலாவுதீன், வியாசர்பாடி ஜாபர் அலி ஆகியோரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், என்ஐஏ அதிகாரிகள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில், சென்னை போலீஸாரும் சில இடங்களில் தனியாக சோதனை நடத்தினர்.
தற்கொலை படை தாக்குதல்: இது தொடர்பாக என்ஐஏ நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கோவையில் உயிரிழந்த ஜமேஷா முபின், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர். காரில் வெடி பொருட்களை நிரப்பி, மதப் பிரச்சினையை உருவாக்கும் நோக்கில், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும், எதிர்பாராத வகையில் கார் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் பாலக்காடு பகுதியிலும் நேற்று ஒரே நேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேரின்
உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 43 இடங்களில் நேற்று அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்களும், டிஜிட்டல் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது"