சென்னை: தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அதிமுக தலைவர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே மோதல் நீடித்து வருவது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என இரு தரப்பினரும் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவில் பன்னீர்செல்வத்துக்கு இடம் இல்லை என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். பன்னீர்செல்வமோ, கட்சி இணைய வேண்டும், இரட்டை தலைமை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நாளை (நவ.12) நடைபெறும் இந்தியா சிமென்ட் நிறுவன விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனி விமானத்தில் இன்று இரவு சென்னை வருகிறார். எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு ஓய்வெடுக்கிறார். 2024 தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் கூட்டணியை பலப்படுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அதனால், இந்த பயணத்தில் அதிமுகவில் இரு அணியினரிடையே சமரசத்தை ஏற்படுத்த அமித்ஷா முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக இன்று இரவு பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்திருப்பதாக தெரிகிறது. இதில் சமரசம் ஏற்படுமா என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக பழனிசாமி ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “மரியாதை நிமித்தமாக வேண்டுமானால் அமித் ஷாவை பழனிசாமி சந்திப்பார். உட்கட்சி விவகாரங்கள் குறித்து அமித் ஷாவிடம் பேச வாய்ப்பில்லை” என்றனர். ஓபிஎஸ் தரப்பினர் கூறும்போது, “கூட்டணி கட்சியின் மூத்த தலைவர் என்பதால் மரியாதை நிமித்தமாக பார்க்க வாய்ப்புள்ளது. கட்சி இணைப்பு தொடர்பாக அங்கு பேச வாய்ப்பில்லை” என்றனர்.