திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த மூன்று மாதங்களில் சுமார் 1.19 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகியநெல் சாகுபடி பருவங்களில் சுமார்2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், சொர்ணவாரி பருவத்தில் 62,589 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை கடந்த மாதம் முடிவுக்கு வந்து, சுமார் 90 ஆயிரம் மெட்ரிக் டன் மகசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பருவத்தில் நெல் பயிர் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணி கடந்தஆகஸ்ட் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கியது. இம்மாதம் இறுதிவரை இப்பணி நடைபெற உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் 1 லட்சத்து 22,265 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 1.75 லட்சம் மெட்ரிக் டன்மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடவு இயந்திரங்கள், விவசாய தொழிலாளர்கள் போதிய அளவில் இருப்பதால், கடந்த 3 மாதங்களில் பூண்டி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து வட்டார பகுதிகளிலும் சுமார் 1.19 லட்சம் ஏக்கர் பரப்பளவில் டி.கே.எம் 13, கோ ஆர் 51, பி.பி.டி 5204, எம்.டி.வி. 1010 உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கு கையிருப்பில் இருந்த விதைகள் விதைக்கப்பட்டு, நாற்றங்களாக உருவாகி, அதில் பெரும்பகுதி நடவு செய்யப்பட்டுள்ளன. சம்பா பருவத்துக்கு தேவையான யூரியா, உரம் போன்ற இடு பொருட்கள் போதிய அளவில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளன.மேலும், இப்பருவத்துக்கான பயிர்க்காப்பீட்டை வரும் 15-க்குள்செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் இலக்கை விட சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி நடைபெறும். டிசம்பரில் தொடங்கி பிப்ரவரியில் இந்த சாகுபடி பணிகள்நிறைவடையும். நெல் அறுவடையின் போது, சுமார் 1.75 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.