தமிழகம்

மதுரை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். செய்தி அறிந்தவுடன், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியை மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT