சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாட்களில் 576 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 30-ம் தேதிக்குப் பிறகு கனமழை குறைந்தது. இதனைத் தொடர்ந்து முடிக்கப்படாத பணிகளை முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். குறிப்பாக, அடுத்த கனமழை தொடர்ந்து வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்ட இன்றைக்குள் (நவ.10) வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைத்தால், வண்டல்களை அகற்றுதல், குழாய் பொருத்துதல், குப்பைகளை அகற்றுதல், சாலைகளில் எற்பட்டுள்ள சிறு பள்ளங்களை சரி செய்தல், திடக்கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.
இதன்படி சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இந்த 10 நாட்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆபத்தான மற்றும் விழும் நிலையில் உள்ள 1,018 மரங்களின் கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 4-ம் தேதி முதல் 9-ம் தேதி 344 நீர்நிலைகளிலிருந்து 119 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.1,35,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 1,968 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,089 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழையின் காரணமாக ஏற்பட்ட அடைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 30-ம் தேதி முதல் 9-ம் தேதி 578 மீட்டர் நீளத்திற்கு மழை வடிகால்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி திருவெற்றியூர் மண்டலத்தில் 78 மீ, மணலி மண்டலத்தில் 50 மீ, மாதவரம் மண்டலத்தில் 32 மீ, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 24 மீ, அண்ணா நகர் மண்டலத்தில் 8 மீ, தேனாம்பேட்டை மண்டத்தில் 95 மீ, கோடம்பாக்கம் மண்டலத்தில் 117 மீ, அடையாறு மண்டலத்தில் 9 மீ, பெருங்குடி மண்டலத்தில் 169 மீ என மொத்தம் 578 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் இணைக்கப்பட்டுள்ளது.