டிடிவி தினகரன் | கோப்புப்படம் 
தமிழகம்

'திமுக ஆட்சியில் தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை' - டிடிவி தினகரன்

செய்திப்பிரிவு

சென்னை: "எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கெனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறு அளவை (Digital Re-Survey) செய்து, தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இருமாநில எல்லை பகுதியில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டு சர்வே செய்வதற்கு அப்போது தமிழகத்துடன் ஒத்துழைக்காத கேரளா, இப்போது தமிழகத்தின் அனுமதியின்றியே இந்த அளவீட்டு பணியை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கெனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ?

ஸ்டாலின் அரசு விழித்துக்கொள்ளுமா? இல்லை தமது கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக் கொடுக்கப் போகிறார்களா?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT