சென்னை: முன்னாள் டிஜிபி ஜாபர்சேட்டின்மனைவி பர்வீன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஜாபர்சேட், கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் உளவுப் பிரிவு உயர் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து சமூக சேவகர்என்ற பெயரில் அரசு விருப்ப உரிமை ஒதுக்கீடு அடிப்படையில்ஜாபர்சேட்டின் மனைவி பர்வீனுக்குசென்னை திருவான்மியூரில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது, முதல்வர் கருணாநிதியின் செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் உள்ளிட்டோருக்கும் மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதற்கிடையில், அவர்கள், தனியார் கட்டுமான நிறுவனத்துடன்கூட்டு ஒப்பந்தம் செய்து அந்த மனையில் கட்டிடம் கட்டி விற்றனர். இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை 2011 இறுதியில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜாபர்சேட்டுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரியான தன் மீது மத்திய அரசின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் ஜாபர்சேட் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஜாபர்சேட் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ஜாபர்சேட் மீதான வழக்கை அமலாக்கத் துறைகையில் எடுத்தது. அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று, கடந்தஜூன் மாதத்தில் விசாரணைக்கு ஆஜரான ஜாபர்சேட்டிடம் 4 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து, வீட்டுவசதிதுறை அமைச்சராக இருந்தஐ.பெரியசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, சட்ட விதிமுறைகளை மீறி, பொய் தகவல் அளித்துமனைகளை பெற்று, அதில் கட்டிடம் கட்டி விற்றதன் மூலம்பர்வீன், துர்கா சங்கர், லேண்ட்மார்க் கட்டுமான நிறுவன உரிமையாளர் உதயகுமார் ஆகியோர் ரூ.14.56 கோடி பயன் பெற்றதாகஅமலாக்கத் துறை தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேருக்கும் சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.