தமிழகம்

அமராவதி அணை நீர்மட்டம் 88 அடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருப்பூர்: தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமராவதி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு, துணை ஆறுகளை நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1,135 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த 6-ம் தேதி விடுக்கப்பட்டது. பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் பிற ஓடைகளின் மூலம் அமராவதி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் எந்நேரமும் திறக்கப்படும். எனவே, அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் திருப்பூர், கரூர் மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நேற்று 2-ம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித் துறையினர் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT