பகலில் கால்டாக்சி ஓட்டுநர் களாக பணிபுரிந்து விட்டு இரவில் கொள்ளையர்களாக வலம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாம்பலம் விநாயகபுரத்தில் வசித்து வருபவர் நாராயணசாமி (68). இவர் கடந்த அக்டோபர் 21-ம் தேதி சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பத் துடன் சென்றிருந்தார். 25-ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து, அவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக நாராயணசாமி வீட்டருகே பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவை போலீ ஸார் ஆய்வு செய்தனர். அதில், 2 பேர் பிரபலமான கால்டாக்சி நிறுவனத்துக்கு சொந்தமான காரில் வந்து கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இது தொடர்பாக நடத் தப்பட்ட விசாரணையில் காரில் வந்தது மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர்களான காஜா முகமது என்ற நயினார் முகமது (38), மற்றும் அவரது மைத்துனர் முகமது நசீர் (32) என்பது தெரிந்தது. இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாராயணசாமி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து அசோக் நகர் போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட இருவரும் பிரபல கால்டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநர்களாக பணி செய்து வருகின்றனர். பகலில் கால் டாக்சி டிரைவர்களாக பணி செய்து வந்துள்ளனர். அந்த நேரத்தில் பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு இரவில் அதே காரில் வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இப்படி பல வீடுகளில் இருவரும் கைவரிசை காட்டியுள்ளனர்” என்றனர்.